இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில் மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் கடந்த முறை அதானியை பற்றி பேசியது உங்களை காயப்படுத்தியிருக்கலாம். அதனால் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் அதானியைப் பற்றி பேசவில்லை. எனவே, பாஜக நண்பர்கள் பயப்பட தேவையில்லை என்று கூறிய ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை செல்லவில்லை, ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல என்று கூறினார்.
தொடர்ந்து, நான் ‘மணிப்பூர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன், ஆனால் மணிப்பூர் இனி இருக்காது என்பதே உண்மை. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள். மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து உடைத்துவிட்டீர்கள் என்று கூறினார்.
மேலும், பாஜகவின் அரசியல் மணிப்பூரை கொல்லவில்லை. மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டது. மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டனர். மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம், நீங்கள் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல என்று தனது உரையில் பல்வேறு விமர்சனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்வைத்தார்.