சாதிவாரி கணக்கெடுப்பு, கல்வி கடன் ரத்து! காங்கிரேசின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

Congress

Congress: மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

18-ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் அறிவிப்பட்டது. அதில், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள், சிஏஏ ரத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது, நாடு முழுவதும் பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் இடம்பெறலாம் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கோ, சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர். அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்:

  • நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • இட ஒதுக்கீட்டிற்கான 50% உச்சவரம்பை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
  • 10 சதவீத இட ஒதுக்கீடு எந்த விதமான பாகுபாடுமின்றி அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும்.
  • SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
  • எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50%ல் இருந்து உயர்த்தப்படும்.
  • நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்.
  • மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
  • பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.
  • மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
  • அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.
  • மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு.
  • தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம்.
  • 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • ரூ.1 லட்சம் ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
  • ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
  • எல்ஜிபிடி சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
  • 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும்.
  • மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்.
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூதாயத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு.
  • ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச்சலுகை வழங்கப்படும்.
  • தேசிய கல்வி கொள்கை மறு ஆய்வு செய்யபப்டும்.
  • 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்.
  • 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி நாளொன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது.
  • எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி தாவினால் உடனடியாக பதவியை இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
  • பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
  • விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.
  • மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும்.
  • பாஜக அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி 2.0 கொண்டுவரப்படும்.
  • ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
  • அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்