பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!
எனக்கு வாக்களித்தால் பிரியங்கா காந்தி கன்னம் போல சாலைகள் அமைப்பேன் என கூறிய டெல்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி வீட்டின் முன் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை பிரதான கட்சியினர் ஆரம்பித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.
டெல்லி முதலமைச்சர் அதிஷி போட்டியிடும் கல்காஜி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி என்பவர் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அதிஷி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதற்கு அதிஷி பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அழுதுவிட்டார்.
அதற்கு அடுத்ததாக தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்புகளை சம்மதித்துள்ளார். ரமேஷ் பிதுரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகையில், ” பீகாரில், லாலு பிரசாத் யாதவ் பிரச்சாரம் செய்யும் போது அம்மாநிலத்தில் ஹேமமாலினியின் கன்னங்கள் போல் சாலைகளை அமைப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ” எனக்கூறிவிட்டு,
” கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தி (காங்கிரஸ் எம்.பி) கன்னங்கள் போல உருவாக்குவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ” பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரமேஷ் பிதுரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவிட்டார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியினரும் கூட கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பிதுரி கருத்து வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலை என்று காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்தார்.
ரமேஷ் பிதுரி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள ரமேஷ் பிதுரி இல்லத்திற்கு முன்பு, இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பிதுரிக்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், செருப்பு கொண்டு அவரது வீட்டு பெயர் பலகையில் அடித்தும், அவர் வீட்டு வாசலில் அவருக்கு எதிரான வாசகங்களை எழுதியும் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.