100 நாள் வேலை ஊதியம் ரூ.400 உயர்வு.. காங்கிரஸ் வாக்குறுதி!
Congress : காங்கிரஸ் ஆட்சி வந்தால் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ.400 உயர்த்தப்படும் என அறிவிப்பு.
மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார். அதன்படி, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருநாள் ஊதியம் ரூ.400 உயர்த்தப்படும் என்றும் நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ரூ.1 லட்சம் ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இடம்பெற்றுள்ளது.
மேலும், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது.