காங்கிரஸில் மாற்றம் வேண்டும்.! சோனியாவுக்கு 23 மூத்த தலைவர்கள் கடிதம் – நாளை கூடுகிறது செயற்குழு கூட்டம்.!
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதில், 5 முன்னாள் முதலமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தற்போது உள்ள எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இளைய தலைமுறை வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்து வருவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் குறித்து கடிதத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. களத்தில் முழுவீச்சில் செயல்படக்கூடிய தலைவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியை மறு சீரமைக்க வேண்டும் என்று சோனியாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாஜக மற்றும் மதம் சார்ந்த அரசியலால் ஏற்பட்டுள்ள அச்சம், பாதுகாப்பின்மை, பொருளாதார பின்னடைவு வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டுள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் இடையே கடுமையாக மோதலும், கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. அதிலும் மாநிலங்களில் உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அடுத்ததாக பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் வரஉள்ளன. இதனை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. அதுவரை சோனியாகாந்தி தலைவராகத் தொடர ஒப்புதல் வழங்குவதா, இல்லை புதிய இடைக்கால தலைவரை நியமிப்பதா என்பதும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.