மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு..!
காங்கிரஸ் கட்சி,எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லியில் 9 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.அதன்பின்,குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் தேசிய தலைநகரில் போராட்டம் நடத்தினர்.அப்போது,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, இறந்த பெண்ணின் குடும்பத்தை சந்தித்தார்.பின்னர்,அவர் ட்விட்டரில் சிறுமியின் பெற்றோருடன் சந்தித்த புகைப்படம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இதனையடுத்து,இறந்த சிறுமியின் பெற்றோருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததால், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.மேலும்,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிசிபிஆர்) ஃபேஸ்புக் நிறுவனத்தை வலியுறுத்தியது.
மேலும்,சிறுவர் நீதி சட்டம், 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (2012) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் என்சிசிபிஆர் பேஸ்புக்கை கேட்டுக் கொண்டது.இதற்கிடையில்,காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் தனது கணக்கை தற்காலிகமாக முடக்கியதற்கு பதிலளிக்கும் விதமாக,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தேசிய அரசியல் செயல்பாட்டில் ட்விட்டர் நிறுவனம் தலையிடுவதாக குற்றம் சாட்டினார், மேலும் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கியது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல் என்று கூறினார்.
“ட்விட்டர் மைக்ரோ பிளாக்கிங் தளம் ஒரு நடுநிலை மற்றும் புறநிலைத் தளம் அல்ல.அது அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்,இதனை உறுதி செய்யும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சத்யமேவ ஜெயதே’ என்று தெரிவித்துள்ளது.
Satyameva Jayate
— Congress (@INCIndia) August 14, 2021