ஹரியானா தேர்தலில் களமிறங்கும் வினேஷ் போகத்., பஜ்ரங் புனியா.? ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு.!
ஹரியானா தேர்தல் தொடர்பாக விளையாட்டு வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். 3வது முறையாக தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜகவும், நாடாளுமன்ற தேர்தலில் முந்தைய 2 தேர்தல்களை விட அதிக தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சியும் அதே உத்வேகத்துடன் ஹரியானா தேர்தலை எதிர்கொள்கின்றன.
இதில் ஹரியானா தேர்தலில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர்களுடன் காங்கிரஸ் எம்.பியும், இளம் தலைவருமான ராகுல் காந்தி நேற்று சந்திப்பு நடத்தினார். ஒலிம்பிக் இறுதி போட்டி வரை சென்று எடை அதிகரிப்பால் பதக்கத்தை தவறவிட்ட வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜிரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என கூறப்பட்டு இருந்தது.
இப்படியான சூழலில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் இருவரும் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். இந்த சந்திப்பில் இருவரும் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு அருகில் வந்த காங்கிரஸ் இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இலக்குடன் கூட்டணி பேச்சுவார்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்து களமிறங்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.