வாக்களிக்கும் வயது 18., ஐடி வளர்ச்சி., பெண்களுக்கு அதிகாரம்.! ராஜீவ் காந்திக்கு தலைவர்கள் மரியாதை…
டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 20) கொண்டாடப்படுகிறது. இந்திராகாந்தி மறைவுக்குப் பின்னர், 40 வயதில் இந்தியப் பிரதமராகவும் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ராஜீவ் காந்தி. இவரது ஆட்சியில் தான் வாக்களிக்கும் வயது 18ஆக குறைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ராகுல் காந்தி மரியாதை :
ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ராஜீவ் காந்தி நினைவுகளைப் பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் உள்ள ரிங் ரோட்டில் வீர் பூமி எனுமிடத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு , அவரது மகனும், காங்கிரஸ் எம்பியுமா ராகுல் காந்தி நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் தனது தந்தை ராஜீவ் காந்தி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிடுகையில், ” இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம் (தனது அப்பா ராஜீவ் காந்தியை குறிப்பிட்டு ) அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே :
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், “இன்று நாடு நல்லெண்ணங்களுக்கான தினத்தைக் கொண்டாடுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவின் சிறந்த மகன். அவர் கோடிக்கணக்கான இந்தியர்களிடையே நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அவரது அளவில்லா பங்களிப்பால் இந்தியா அப்போதே 21ஆம் நூற்றாண்டை நோக்கிச் சென்றது. வாக்களிக்கும் வயதை 18ஆகக் குறைத்தார். நாடு முழுவதும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தைத் தொடங்கினர்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை நாட்டில் ஏற்படுத்தினார். கணினிமயமாக்கல் திட்டம் தொடர்பாக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அண்டை நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தினார். உலகளாவிய தடுப்பூசி திட்டம், கல்வியை மேம்படுத்தும் புதிய கல்விக் கொள்கை போன்ற அவரது பல்வேறு நடவடிக்கைகள் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தின. எங்கள் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.” என்று கார்கே பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை :
ராஜீவ் காந்தியின் குறுகிய கால அரசியல் நிகழ்வுகள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில், “மார்ச் 1985இல் பட்ஜெட்டில் அவர் முக்கிய பங்கு வகித்தார். பொருளாதாரக் கொள்கையில் ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவந்தார். ஜூன்-ஜூலை 1991 இல் ராவ்-மன்மோகன் சிங் சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் ராஜீவ் காந்தி.
அவரது கட்சியைக் காட்டிலும், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு அஸ்ஸாம், பஞ்சாப், மிசோரம் மற்றும் திரிபுரா போன்ற நாட்டின் பதற்றமான பகுதிகளில் அமைதி உடன்பாடுகள் கொண்டுவந்தது அவரது அரசாட்சியில் சாத்தியமானது. குடிநீர் விநியோகம், நோய்த்தடுப்பு, கல்வியறிவு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் பால்வள மேம்பாடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பப் பணிகளில் பிரதிபலிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமூக பயன்பாடுகளுக்கான பார்வை அவருக்கு இருந்தது.
1985ஆம் ஆண்டில், 165,000 கிராமங்கள் எந்த குடிநீர் ஆதாரத்தையும் எளிதில் அணுக முடியாதவை எனக் கண்டறியப்பட்டு 1989 வாக்கில், இந்த கிராமங்களின் 162,000 கிராமங்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான குடிநீர் வசதி வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி ஆட்சியின் கீழ் போலியோ சொட்டு மருந்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவை மென்பொருள் ஏற்றுமதி அதிகார மையமாக மாற்றுவதற்கான முதல் படி ராஜீவ் காந்தி பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டது. C-DAC போன்ற நிறுவனங்கள் இப்போது நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நிறுவனங்கள் 1980களிலேயே இந்தியாவில் நிறுவப்பட்டன.
தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 1986ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையானது அவரது முற்போக்கான சிந்தனைக்கு நங்கூரமிட்ட திட்டமாகும். இந்த முயற்சியிலிருந்துதான் இன்றைய நவோதயா வித்தியாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 243வது பிரிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவரது கடுமையான அர்ப்பணிப்புக்கான அஞ்சலியாகும். இன்று, இந்த சுய-அரசு நிறுவனங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர், அவர்களில் 40% க்கும் அதிகமானோர் பெண்கள் ஆகும். நாம் இன்று ஒரு பிரதமரை மட்டுமல்ல, எந்த ஒரு தீய எண்ணமும் இல்லாத, பழிவாங்கும் எண்ணம் காட்டாத, பழிவாங்கும் எண்ணமில்லாத, வன்முறையில் ஈடுபடாத மிகச் சிறந்த மற்றும் அக்கறையுள்ள மனிதரை நினைவுகூருகிறோம்” என ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.