உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று ராஜஸ்தானில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை கணக்கெடுத்து, அதனை அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும், நாட்டில் ஊடுருவியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க திட்டம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கத்தை கூட கணக்கெடுத்து பிரித்து கொடுத்து விடுவார்கள் என விமர்சனம் செய்தார்.
மேலும், பாஜக டிவிட்டர் தளத்தில் பதிவிடுகையில், நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கு உரிமை உள்ளது என காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது போல சிறிய விடியோவையும் பதிவிட்டு, காங்கிரஸ், பொதுமக்களின் சொத்துக்களை கணக்கெடுத்து மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பது போலவும், இஸ்லாமியர்களுக்காக இடஒதுக்கீட்டை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு தற்போது ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பிரதமரிடம் விளக்கி கூற தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், அறிக்கையில் ஏதேனும் வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு அதனை வைத்து மக்களிடம் பிரிவினைவாத பிரச்சாரத்தை முன்வைப்பதே மோடியின் வேலையாக மாறிவிட்டது என்றும்,
நரேந்திர மோடியின் செயலால் பிரதமர் பதவியின் கண்ணியம் குறைகிறது. பிரதமரின் ஆலோசகர்கள் அவருக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தவறாக கூறுகின்றனர். அதனை நாங்கள் விளக்கி கூற கடமைப்பட்டுள்ளோம். அதற்கு அனுமதி தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.