பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இல்லை.. அவர் பிரச்சாரத்தில் இருக்கிறார்.! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றசாட்டு.!
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பித்த நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றியுள்ளன. இதன் மீதான விவாதம் வருகிற 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. 10ஆம் தேதி பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விளக்கம் அளிக்க உள்ளார். அதன் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இல்லை என்றும், தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேசி வருகிறார். ஆனால் நாங்கள் அவரை நாடாளுமன்றத்திற்குள் வந்து பேசுமாறு கேட்டுக் கொள்கிறோம். மணிப்பூர் விவகாரம் குறித்து உங்கள் அறிக்கையை கொடுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு நாங்கள் பதில் அளிப்போம் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
நாடாளுமன்றத்திற்குள் எங்களை பேச அனுமதிக்க விடவில்லை. நாங்கள் பேசும் பொழுது மைக்கை ஆப் செய்து விடுகிறார்கள். இதன் காரணமாகத்தான் தற்போது இந்த செய்தியாளர் சந்திப்பில் நாங்கள் பேசுகிறோம் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பாராளுமன்ற விதி 176க்கு விரிவான விவாதம் நடத்தலாம் வேண்டும் என்று சபாநாயகர் அனுமதி அளிக்கிறார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அந்த விதியின் படி ஒரு விவகாரம் குறித்து விவாதிக்க இரண்டு அரை மணி நேரம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். ஆனால் நாங்கள் கேட்பது விதி எண் 267. இதன் மூலம் நீண்ட நேரம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை முழுமையாக தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.