இமாச்சலில் காங்கிரஸ், குஜராத்தில் பாஜக! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் தேர்தலின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுபோன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 182 தொகுதிகளையு கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், குஜராத்தில் பாஜக அமோக வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. அங்கு, 139 இடங்களில் வெற்றி பெற்று, 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுபோன்று, காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்று, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வேற்று பெற்றுள்ளது. குஜராத்தில் 139 இடங்களில் வெற்றி பெற்று, 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் பாஜக குஜராத் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம், குஜராத்தில் பாஜக என்றால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. தற்போது, 39 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 18 இடங்களை வெற்றி பெற்றுள்ள நிலையில், 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.