பிரதமரின் தியான நிகழ்வு… அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.! காங்கிரஸ் பரபரப்பு புகார்.! 

PM Modi - Congress Flag

தேர்தல் விதிமுறைகள்: இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு வாக்குப்பதிவு சமயத்தில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வானது தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். இன்று மாலை 5.30 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் வரையில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் தியான நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.

ஜூன் 1ஆம் தேதியன்று தான் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 57 தொகுதியில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடைத்துவிடும். இதனை அடுத்து பிரதமர் மோடியின் தியானம் எதிர்க்கட்சியினர் மத்தியில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இது தேர்தல் விதிமீறல் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் ரன்தீப் சுர்ஜேவாலா, அபிஷேக் சிங்வி மற்றும் சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்தை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதில், கடந்த சில நாட்களில் பாஜகவின் தேர்தல் விதிமீறல்கள் என 27 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தியான நிகழ்வுக்கு எதிரான புகாரில், கன்னியாகுமரியின் ‘தியான மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ள தியான நிகழ்வானது, ஜூன் 1ஆம் தேதி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மற்றும் பிற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நிகழ்த்தப்படும் தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் புகாரில் கூறியுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951இன்படி தேர்தல் விதிகளை மீறும் செயலாகும். பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி தியானத்தை தொடங்கி தொடர்ந்து 48 மணிநேர தியானத்தில் ஈடுபடுவார் என்றும் பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அப்படியானால், இந்த பயணம் பரவலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், எனவே ஸ் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதியான வாரணாசியில் 48 மணி நேர தேர்தல் பிரச்சார கட்டுப்பாட்டு காலத்தின் போதும் தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடியின் தியான நிகழ்வு காண்பிக்கப்படும்.

இந்த தியான பயணத்தின் மூலம், 48 மணி நேர தேர்தல் பிரச்சார கட்டுப்பாட்டு காலத்தை தவிர்த்து, இனம், கலாச்சாரம் அடிப்படையில், நியாயமற்ற முறையில் மறைமுக பிரச்சாரமாக பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார். தேர்தல் விதிமுறைகளை இவ்வாறு மீறி, தனது வாக்குசதவீதத்தை அதிகரிக்க நரேந்திர மோடி முயற்சிக்கிறார்.

தேர்தல் காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரதமர் தனது தியானத்தை வாக்குப்பதிவு முடிந்த பிறகு தொடங்கலாம், அதாவது ஜூன் 1 மாலை முதல். துவங்கலாம். இல்லையென்றால், அவர் மே 30 முதல் தியானம் செய்ய விரும்பினால், அதை டிவி அல்லது அச்சு ஊடகங்கள் ஒளிபரப்ப கூடாது என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் (காங்கிரஸ்) நம்புகிறோம் என காங்கிரஸ் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்