மணிப்பூரில் ராகுல் காந்திக்கு தடை – காங்கிரஸ் கண்டனம்!
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தடை.
மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்துக்கு ஏற்பட்ட மோதல் கலவமரக வெடித்தது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், வன்முறை ஓய்ந்தபாடு இல்லை. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறை வெடித்ததில் கிட்டத்தட்ட 110 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது மணிப்பூர் அரசு. இந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் கலவரம் தொடர்பாக அங்கு நேரில் சென்று விசாரிக்க இம்பால் சென்றடைந்துள்ளார். வன்முறையில் பாதித்து முகாமில் உள்ள மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்க ராகுல் காந்தி மணிப்பூர் சென்றிருந்தார்.
இந்த நிலையில், மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இம்பால் விமான நிலையத்தில் இருந்து சூரசந்த்பூர் சென்ற ராகுலை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்று கொண்டிருந்தார் ராகுல் காந்தி.
மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுலை அனுமதிக்கும் நிலையில் இல்லை என கூறி வாகனங்களை தடுத்துள்ளது போலீஸ் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை எதற்காக தடுத்தார்கள் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார், ராகுலை சந்திக்க சாலையின் இருபுறமும் மக்கள் காத்திருக்கின்றனர் என்றுள்ளார்.