காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டி!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அண்மையில் அறிவித்திருந்தது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், நாளைகடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும். மேலும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியாகும்.
பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது மாநிலங்களவை வேட்பளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்!
அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ராஜஸ்தான், பீகார், இமாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தலைவர் மல்லுகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜெய்ப்பூரில் இன்று சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மக்களவை எம்பியாக இருக்கிறார் சோனியா காந்தி. 5 முறை மக்களவை தேர்தலில் வென்ற சோனியா காந்தி, தற்போது முதல்முறையாக மாநிலங்களவை எம்பி ஆகிறார்.
The Congress President Shri @Kharge has approved the candidature of the following persons as Congress candidates to contest the biennial elections to the Council of States from the states mentioned against their names. pic.twitter.com/fduRiKMsxW
— Congress (@INCIndia) February 14, 2024