வேட்புமனு வாபஸ்…. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்.!
Election2024 : மத்திய பிரதேசத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம்.
மக்களவை தேர்தல் சமயத்தில் பல்வேறு எதிர்பாரா அரசியல் பரபரப்பு நிகழ்வுகள் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றன. முன்பு குஜராத் சூரத் மக்களவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறவே, சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்று எம்பியாக தேர்வானார். 2024 தேர்தலில் பாஜக , தங்கள் முதல் வெற்றியை பெற்றது.
தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மத்திய பிரததேசத்தில் நிகழ சூழ்நிலை அமைந்துள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அக்ஷய் காண்டி பம், தற்போது தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனை பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய வர்கியா தெரிவித்துள்ளர்.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தூரில் மாற்று வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்ய 2 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் காங்கிரஸ் தரப்பு , மத்திய பிரதேச இந்தூரில் வேட்பாளர் இல்லாமல் பின்னடைவை சந்தித்து உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 கட்டங்களில் 12 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து வரும் மே 7 மற்றும் 13 தேதிகளில் மீதம் உள்ள 17 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மே 13ஆம் தேதி இந்தூரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தூரில் பாஜக வேட்பாளராக கடந்த முறை (2019 தேர்தல்) வெற்றிபெற்ற சங்கர் லல்வானிபோட்டியிடுகிறார். சூரத் போல இந்தூரில் மற்ற வேட்பாளர்களும் இன்றைக்குள் வாபஸ் பெற்றால், பாஜக 2024 மக்களவை தேர்தலில் தங்கள் 2வது வெற்றியை பெற வாய்ப்புள்ளது.