#அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு

Default Image

மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்ததே ஒரு நாடகம் தான் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா  சிரோண்மணி அகாலி தளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் சிரோண்மணி அகாலி தளமும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சியின் சார்பில் மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்இவர்  அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்.

மற்றொரு உறுப்பினராக அவருடைய மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், பிரதமர் மோடி அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் மந்திரியாக இருந்து வந்தவர்.

இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கின்ற மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாக்களுக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோண்மணி அகாலி தளம் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும்  மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. நிறைவேறிய அன்றே சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மசோதாவுக்கு எதிரான வாக்கு அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு மக்களவையில் மற்ற 2 வேளாண் மசோதாக்கள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுக்பீர் சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு சிரோண்மணி அகாலி தளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை  ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அதிரடியாக அறிவித்தார்.

கூறிய சிறிது நேரத்திலேயே மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல்  ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ராஜினாமா எல்லாம் ஒரு நாடகம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: உண்மை பக்கம் நிற்காமல், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சிரோண்மணி அகாலி தளம் தற்போது வரை  நீடிக்கிறது. மசோதாக்கள் குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கும்போதே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் எதிர்க்காதது ஏன்? அப்போதே ராஜினாமா செய்து, பா.ஜ.கவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாமே? நாடகம் நடத்தாமல் விவசாயிகள் பக்கம் நில்லுங்கள் என்று கடுமையாக விமர்சித்து  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்