நாளை நாடு முழுவதும் போராட்டம்.. காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!
Congress: வருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், வருமான வரி கணக்கை முறையாக செலுத்தாத கட்சிகளுக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
அந்தவகையில், காங்கிரஸிடம் சுமார் ரூ.1,800 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் இதனால் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து வருமான வரி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த கோரி காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, ரூ.1,823 கோடி வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு எதிராகவும் 135 கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்ததற்கு எதிராகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த கோரி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசே வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாளை நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.