பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்களுக்கு பாராட்டு விழா..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்கள் டெல்லி திரும்பினர். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா (தங்கம்), பஜ்ரங் புனியா (வெண்கலம்), மீராபாய் சானு (வெள்ளி), பிவி சிந்து (வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (வெண்கலம்), ஆண்கள் ஹாக்கி அணி (வெண்கலம்) மற்றும் ரவிக்குமார் தஹியா (வெள்ளி) பதக்கங்களை வென்றனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீரர்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்தனர். விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டிய இந்தியக் குழுவை பிரதமர் மோடி பாராட்டினார். அதுமட்டுமில்லாமல், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த பாராட்டு விழா டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி நிசித் பிரமாணிக், சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.
தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு நினைவுப்பரிசு வழங்கும் தருணத்தில் பலரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். அப்போது பேசிய நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் கிடைத்த தங்கப்பதக்கம் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, நம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது என்று தெரிவித்தார்.