மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து தனது புகாரை அந்த பெண் அளித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பலர் இந்த பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், உண்மை வெல்லும். கற்பனை கதைகளால் நான் பயப்பட மாட்டேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். இவர்களால் என்மீது களங்கம் ஏற்படுத்த முடியும். ஆனால் மேற்கு வங்கத்தில் மக்கள் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிராக போராடி வருவதை அவர்களால் நிறுத்த முடியாது என்று சி.வி.ஆனந்த போஸ் கூறினார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், பிரதமர் மோடி விரைவில் கொல்கத்தாவிற்கு தேர்தல் பயணமாக வர உள்ளார். அப்போது, ஆளுநர் மாளிகையில் தான் தங்குவார். அந்த சமயம் இந்த புகார் குறித்து ஆளுநரிடம் கேட்பாரா.? சமூகநீதி பற்றி பேசும் பிரதமர் மோடி, அமித்ஷா இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தர வேண்டும் என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆளுநர் மாளிகை பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்து கொல்கத்தா காவல்துறை சார்பில் கூறுகையில், நாங்கள் அந்த புகாரை தீவிரமாக விசாரித்து வருகிறோம். புகாரில் உள்ள விவரத்தை தங்களால் பகிர முடியாது என்றும், புகாரின்படி, இந்த சம்பவம் ராஜ்பவனில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல முறை இந்த சம்பவம் நடந்ததாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார் என்றும் கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.