23 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை!
நாட்டில் 23 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில், 23 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளை அலகாபாத், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்ய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பறித்துரைத்துள்ளது.
நீதிபதி அரவிந்த் சிங் சங்வான் அலகாபாத்துக்கும், நீதிபதி அவ்னீஷ் ஜிங்கனை குஜராத்திற்கும், நீதிபதி ராஜ் மோகன் சிங் மத்தியப் பிரதேசத்துக்கும், நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தானுக்கும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, நீதிபதி விவேக் குமார் சிங், நீதிபதி பிரகாஷ் பாடியா, நீதிபதி எஸ்.பி.கேசர்வானி மற்றும் நீதிபதி ராஜேந்திர குமார் ஆகியோர் முறையே அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை, ஜார்கண்ட், கல்கத்தா மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டனர்.
மேலும், உச்சநீதிமன்றம் கொலிஜியம் 4 குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதில், நீதிபதிகள் அல்பேஷ் ஒய் கோக்ஜே, நீதிபதி குமாரி கீதா கோபி, நீதிபதி ஹேமந்த் எம் பிரச்சக் மற்றும் நீதிபதி சமீர் ஜே தவே ஆகியோர் இருக்கின்றனர். ‘மோடி குடும்பப்பெயர்’ என்ற அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் எம் பிரச்சக் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நீதிபதி அல்பேஷ் ஒய் கோக்ஜேவை அலகாபாத்துக்கும், நீதிபதி குமாரி கீதா கோபி சென்னைக்கும், நீதிபதி ஹேமந்த் எம் பிரச்சக் பாட்னாவுக்கும், நீதிபதி சமீர் ஜே தவே ராஜஸ்தானுக்கும் சென்றுள்ளனர். அதேபோல், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து, நீதிபதிகள் ஜி அனுபமா சக்ரவர்த்தி, முன்னூரி லக்ஷ்மன், எம் சுதீர் குமார் மற்றும் சி சுமலதா ஆகியோர் முறையே பாட்னா, ராஜஸ்தான், சென்னை மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த கூட்டத்தில், நீதிபதி எம்.சுதீர் குமாரை கல்கத்தாவிற்கும், நீதிபதி சுமலதாவை குஜராத்திற்கும் இடமாற்றம் செய்ய கொலிஜியம் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு முறையே மெட்ராஸ் மற்றும் கர்நாடகா என மாற்றியது. கொலிஜியம் நீதிபதிகள் சேகர் பி சரஃப், லபிதா பானர்ஜி மற்றும் பிபேக் சவுத்ரி ஆகியோரை கல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் மற்றும் பாட்னாவுக்கு மாற்றவும் பரிந்துரைத்தது.
நீதிபதிகள் சி.மானவேந்திரநாத் ராய் மற்றும் துப்பலா வெங்கட ரமணா ஆகியோர் முறையே ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் இருந்து குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்துக்கு மாற்றவும், நீதிபதி மதுரேஷ் பிரசாத் பாட்னா உயர் நீதிமன்றத்தில் இருந்து கல்கத்தாவுக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நரேந்தர் ஜி.யை ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கூடி மேற்கூறிய இடமாற்றங்களை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.