கூட்டணியில் விரிசல்.., புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி..!
கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வருகின்ற சட்டமன்றத் தோ்தலை என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக மற்றும் அதிமுக சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனால், பாஜக-அதிமுக மற்றும் பாமக இடையே நீண்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக 9 தொகுதிகளில் பாஜகவும், 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில்,
உப்பளம்- A. அன்பழகன், உருளையன்பேட்டை – ஓம் சக்தி சேகர், காரைக்கால் தெற்கு – K.A.Uஅசனா, முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன், முதலியார் பேட்டை – A. பாஸ்கர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- மன்னாடிப்பட்டு – வெங்கடேசன்,
- அரியாங்குப்பம் – சிவராமன்,
- மங்கலம் – மதியழகன்,
- தட்டாஞ்சாவடி – கதிர்வேல்,
- லாஸ்பேட்டை – நரசிம்மன்,
- மணவெளி – கணபதி,
- இந்திராநகர் – வடிவேல்,
- ஊசுடு – கலியபெருமாள்,
- திருபுவனை – சாண்டில்யன்.
மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான விரைவில் வெளியிடப்படும் என புதுச்சேரி பாமக அமைப்பாளர் கோ.தன்ராஜ் தெரிவித்துள்ளார்.