தங்கக் கடத்தல் விவகாரம்: முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தொரு தொடர்பும் இல்லை- என்.ஐ.ஏ!
கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தொரு தொடர்பும் இல்லையென என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனுக்கு இந்த தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், தங்க கடத்தல் தொடர்பாக கேரளா தலைமை செயலகத்திற்கு சிவசங்கரனை சந்திப்பதற்காக சுவப்னா சுரேஷ் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், கேரள தலைமை செயலகத்தில் சோதனை நடத்தி வந்தனர். இந்தநிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், தங்க கடத்தல் வழக்கில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தொரு தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளனர்.