பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!
கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அரசியல் சண்டைகள் இருந்து வருகிறது. நடந்து முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் மம்தா பானர்ஜி. இருந்தபோதிலும் இரு தரப்புக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ பருவம் தொடங்கியுள்ளது. அதனால் மிக சிறந்த வகை மாம்பழங்களை பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி.
மேலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க முதலமைச்சரின் இந்த செயல் இவர்களின் உறவுகளை இனிப்பாக மாற்றுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.