இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு.. 22 பேர் மாயம்.!
ஹிமாச்சல பிரதேசம் : இமாச்சல பிரதேசத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா, மண்டி மற்றும் குலு ஆகிய இடங்களில் மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் உள்ள சமேஜ் காட் பகுதியில் நேற்று இரவு மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், குறைந்தது 22 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
மேலும், வெள்ளபெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டறிய ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், மண்டி மாவட்டத்தின் சோஹர் பள்ளத்தாக்கின் டிக்கன் தால்டு பகுதியில், பெய்த கனமழைக்குப் பிறகு, வந்த வெள்ளம் பல வீடுகளை சேதப்படுத்தியது. அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இயற்கைக்கு இரையாகும் அடுத்த மாநிலமாக ஹிமாச்சல பிரதேசம் உருவெடுத்துள்ளது.