போலீசாருடன் மோதல்: தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்!
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தெலங்கானா: தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள சல்பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது.
மேலும், என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் குறித்து காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேபோல், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நவம்பர் 22ம் தேதி நடந்த என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் இதுபோன்ற மோதல்கள் நடந்துள்ளன.
தற்போது நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் தெலுங்கானா மாநிலக் குழுவின் செயலாளர் பத்ரு என்கிற குர்சம் மங்குவும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.