சிஐடி போலீஸ் இணையதளம் ஹேக்… பிரதமர் மோடி, போலீசாருக்கு எச்சரிக்கை…
மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடி வலைத்தளம் நேற்று முன்தினம் திடீரென ஹேக் செய்யப்பட்டது. அந்த வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் குதிரைமேல் ஒருவர் அமர்ந்து கையில் கொடியை வைத்திருப்பது போலவும் , படத்திற்கு அருகில் “இமாம் மஹ்தி அரசு” எனவும் காவல்துறையின் இணைய பக்கமும் ஹேக் செய்யப்பட்டது என எழுதப்பட்டு இருந்தது.
அந்த புகைப்படத்திற்கு கீழே சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரங்களைக் குறிப்பிட்டு “பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். நாங்கள் இந்திய காவல்துறை மற்றும் மோடி அரசாங்கத்தை எச்சரிக்கிறோம். முஸ்லிம் மக்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள். இமாம் மஹ்தி விரைவில் வருகிறார் என எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் குல்கர்னி கூறுகையில், இது ஒரு ஹேக்கிங் அல்ல பாதுகாப்பு அம்சங்களை சரிபார்க்க புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தில் சிலர் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர் என கூறினார்.
சமீபத்தில் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.