வெறுப்பை அல்ல.. வேலையை தேர்ந்தெடுங்கள்.! ராகுல் நம்பிக்கை.!
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையியல் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி , பிரதமர் மோடி இடையேயான வார்த்தை போர், விமர்சனங்கள் என்பது பிரச்சார மேடைகளில் தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே, பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை குறிப்பிட்டு, அதானி, அம்பானியிடம் டெம்போவில் காங்கிரஸுக்கு பணம் வருகிறது. அதனால் தான் கடந்த 5 வருடங்களாக அவர்களை விமர்சித்து வந்த ராகுல் காந்தி, தேர்தல் சமயத்தில் அவர்களை விமர்சிக்க மறுக்கிறார் என கூறியிருந்தார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நேற்று காலை வீடியோ மூலம் பேசிய ராகுல் காந்தி, மோடி பதட்டமடைந்து அதானி, அம்பானி பெயர்களை பொதுவெளியில் கூறுகிறார். அதானி, அம்பானியிடம் பணம் பெற்று இருப்பதாக கூறுகிறார். வேண்டுமென்றால் ED, CBIக்களை ஏவி விசாரணை மேற்கொள்ள சொல்லுங்கள் என கூறினார்.
இதனை தொடர்ந்து நேற்று பிற்பகலில், ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓர் வீடீயோவை வெளியிட்டுள்ளார். அதில் , இளைஞர்களே, மோடியின் பொய் பிரச்சாரத்தால் மதவாத பிரச்சாரத்தால் திசை திருப்பாதீர்கள். ஜூன் 4ஆம் தேதி மாற்றம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணிகள் நிரப்பப்படும். வெறுப்பை தவிர்த்து நல்ல வேலையை தேர்ந்தெடுங்கள் என இளைஞர்களுக்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தார்.