#நாட்டுக்கு அர்ப்பணிப்பு – பரிசோதனைக்கு தயார்!ஆசிரியரின் அறச்செயல்
கொரோனா தடுப்பூசி மருந்தை முதன் முதலாக மனிதர்களிடம் செலுத்தும் திட்டத்தில் நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளேன் என்று இளம் ஆசிரிய இளைஞர் தெரிவித்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
உலகில் மிக கொடூரமாக கொரோனா பரவி வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.இரு மடங்காக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு சற்று கவலை அளிக்கும் விதத்திலே இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி மருந்தை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் கண்டுபிடித்தது.முதலில் விலங்குகளின் மேல் பரிசோதித்தது அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே அதனை மனிதர்கள் மேல் பரிசோதிக்கவும் ஆயுத்தமாகி உள்ளது.
மனிதர் மேல் பரிசோதிக்கும் விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் தனது உடலை பரிசோதனைக்கு அளித்து அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சிரஞ்சித் திபார் என்ற இளைஞர் ஆசிரியர் பணியுடன், ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் இருந்து வருகிறார். கொடிய கொரோனாவிற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனைகளில் எல்லாம் இந்த இளம் இளைஞர் பங்கேற்றுள்ளார்.
மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் திட்டத்தில் பங்கேற், ஓரிரு தினங்களில் இந்த இளம் ஆசிரியர் ஒடிசா செல்ல இருக்கிறார்.
இது குறித்து சிரஞ்சித் திபார் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :- ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட நான், கொரோனா தடுப்பூசி மருந்தை, மனித உடலில் செலுத்தும் பரிசோதனையில் பங்கேற்க உள்ளேன். நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு தயார் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவரை பரிசோதனைக்கு வருமாறு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில், ‘கோவாக்சின்’ என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல ‘சைடஸ் கெடிலா’ நிறுவனமும், ‘சைகோவ் – டி’ என்ற தடுப்பூசி மருந்தையும் உருவாக்கி உள்ளது.இந்நிறுவனங்களின் தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை அனுமதி வழங்கி உள்ளன.இதனுடன் பரிசோதனை மேற்கொள்ள 12 மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.