2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணியவேண்டும் – ஒடிசா அரசு..!
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,40,46,809 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,44,776 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இதுவரை 2,00,79,599 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சரியான முறையில் முகமூடி அணியுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஒடிசா அரசு இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெற்றோரிடம் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்திய குழந்தை மருத்துவ அகாடமியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, ஒடிசா மாநில அரசு இந்த வழிமுறைகளை வழங்கியுள்ளது.