குழந்தைகளுக்கு ‘முகக்கவசம்’ அவசியமில்லை – சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்..!
5 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஊரடங்கால் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 18 வயதிற்குள் இருப்பவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறையின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவர் மற்றும் பிற கொரோனா மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்படவில்லை. இந்த ரெம்டெசிவர் மருந்து 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அறிகுறி இல்லாமல் இருந்தாலோ அவர்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்த கூடாது என்றும், இதனால் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, 5 வயத்திற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியவேண்டிய தேவையில்லை. பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வழிகாட்டுதல் படி, 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணியலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேவையான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.