குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!
குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்தவர் மீதான போக்ஸோ வழக்குப்பதிவை நீக்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
குழந்தைகளின் ஆபாச படத்தை அந்த இளைஞர் தன் மொபைல் போனில் வைத்திருந்தார். ஆனால் , அதனை யாருடனும் பகிரவில்லை என்ற அந்த இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு போக்ஸோ வழக்கை ரத்து செய்து இருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த மேல்முறையீடு மனுவானது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் மீதான விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவே உச்சநீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளியிடப்பட்டது . நீதிபதி ஜே.பி.பார்திவாலா தீர்ப்பை வாசித்தார். அதில், சிறுவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை “மிகப்பெரிய தவறு” என்று விமர்சித்தார்.
மேலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் அல்லது வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைத்து, அதனை அழிக்க தவறினால், ரூ.5 ஆயிரத்திற்கு குறையாத அளவு அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரத்திற்கு குறையாத அளவுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளிநபர்களுக்கு வணிக ரீதியில் அனுப்பினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இனி குழந்தைகளின் ஆபாச படங்கள் என அதனை குறிப்பிடாமல் குழந்தைகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வீடியோ (அ) புகைப்பட தரவாக ( Child Sexual Exploitative and Abuse Material – CSEAM ) சேமிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட வேண்டும் என்றும், இதனை மற்ற நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதே பெயர் திருத்தத்தை சட்டத்திருத்தத்திலும் கொண்டு வரவேண்டும் என்றும், இம்மாதிரியான புகார்கள் தொடர்பாக போக்ஸோ சட்டதிருத்தத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் பரிந்துரைத்துள்ளோம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா கூறினார்.
குழந்தைகள் பாலியல் வீடியோ விவகாரம் தொடர்பாக இளைஞர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கை நீக்கி உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.