புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு…!
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் சிகிச்சை முடிந்து, வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் அவர்கள், காலை 9:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் புதுவையின் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் வந்து 23 நாட்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.