இரண்டாக பிரிந்த சிவசேனா.! முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சூரியன், வாள், அரசமரம் ஆகிய சின்னத்திற்கு விருப்பம்.!
மகாராஷ்டிரா இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையான அணியினர் தேர்தல் சின்னமாக அரசமரம், வாள், சூரியன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிவசேனா ஆட்சிபுரியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த வேளையில், உள்கட்சி பிரச்சனை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக மாறினார்.
தற்போது அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியையும் சின்னத்தையும் கேட்டனர்.
இதனை தொடர்ந்து கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை முடக்கியது. மேலும், இரு தரப்பும் புதிய கட்சி பெயரை தேர்வு செய்து, சின்னத்தையும் தேர்வு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா – உத்தவ் பாலே சாகிபின் தாக்கரே என கட்சி பெயரையம் , எரியும் ஜோதி சின்னத்தை தேர்தல் சின்னமாகவு தேர்வு செய்தது.
அதே போல மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனது கட்சி பெயரை பாலே சாகிபின் சிவசேனா என மாற்றி முதலில் திரிசூலம் மற்றும் கதாயுதம் ஆகியவற்றை சின்னமாக கேட்டது.
ஆனால் இரண்டும் மத அடையாளங்களை குறிப்பதால் அது முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து சூரியன், வாள், அரசமரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் சின்னமாக தேர்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் விருப்பத்தை பரிந்துரை செய்துள்ளனர் ஏக்நாத் ஷிண்டே அணியினர்.