மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் மரணம் – இருவர் கைது….!
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாக் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டத்தின் முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நேரம் வழக்கம் போல தனது வீட்டின் அருகே உள்ள சாலை ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதனையடுத்து படுகாயமடைந்த நீதிபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நீதிபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சோதனை செய்து பார்த்த பொழுது இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்த நீதிபதி மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்ததாகவும், அந்த கும்பலை சேர்ந்த இருவருக்கு மரணமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் ஜாமீன் கொடுக்க மறுத்ததால் அவர் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், தலைமை நீதிபதி ரமணா அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கூறிய தலைமை நீதிபதி ரமணா அவர்கள் கொலை தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், தொடர்ந்து நாங்களும் இந்த விவகாரத்தில் உற்றுநோக்கி கவனித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார். இந்த கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் குமார் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.