சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!
இந்த மாத இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று காலை 8 மணி முதல் 20 தொகுதிகளில் மட்டும் தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் உள்ள பல இடங்கள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
அதன்படி மோலா-மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், கான்கேர், கேஷ்கல், கொண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கோண்டா ஆகிய இடங்களில் 10 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மோஹ்லா மன்பூரில் 73% ஆகவும், அன்டகரில் 65.67% ஆகவும், பானுபிரதாப்பூரில் 68.50% ஆகவும், தண்டேவாடாவில் 51.90% ஆகவும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கைர்கர், டோன்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, பஸ்தர், ஜக்தல்பூர், சித்ரகோட், பண்டாரியா மற்றும் கவர்தா ஆகிய தொகுதிகளில் மக்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் 3 மணி நிலவரம் குறித்து பார்க்கலாம்.
முதல் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 59.19% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல, மிசோரம் மாநிலத்தில் 69.86% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது