Chandrayaan-3:வரலாறு படைக்கும் சந்திரயான்-3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்குகிறது.!

Chandrayaan-3

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி (இன்று) நிலவில் தரையிறங்குகிறது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பல்வேறு கட்டங்களுக்கு பிறகு, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்யும் முதல் நாடு என்ற பெருமையும் நிலவுக்கு சென்ற 4வது நாடு என்ற பெருமையும் இந்தியா பெறும்.

சுற்றுப்பாதை குறைப்பு:

இந்நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக சுற்றுவட்ட பாதையில் கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக சுற்றுவட்ட பாதையில் கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு, ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. பின்னர், ஆகஸ்ட் 16 ஆம் தேதி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும் அதன் பின்னர் விக்ரம் லேண்டர் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பிரிந்தது ‘விக்ரம்’ லேண்டர்:

அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

முதல் டீபூஸ்டிங்:

உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையின் முதல் டீபூஸ்டிங் முறையில் சற்று குறைக்கப்பட்டது. லேண்டர் பகுதியின் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக 113 கிமீ x 157 கிமீ தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இறுதி டீபூஸ்டிங்:

இத்தனையடுத்து, இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தற்போது, விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ சுற்றுப்பாதையில், நிலவை சுற்றி வருகிறது.

சந்திரயான் – 2  உடன் சந்திராயன்-3 தொடர்பு:

கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சந்திரயான் – 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. இந்த நிலையில், நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர், சந்திரயான் – 2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிலையில், வெற்றிகரமாக சந்திரயான் – 2 ஆர்பிட்டருடன், சந்திராயன் 3 லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது.

தரையிறங்கும் சந்திரயான்-3

இந்நிலையில், சந்திரயான்-3 இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்குகிறது. தரையிறங்குவதற்கான கடைசி 15 நிமிடங்களுக்கு முன் இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் போதுதான் மிகவும் பதட்டமான தருணமாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டத்தில் தான் கடந்த முறை, சந்திரயான் -2 வேகம் மற்றும் இயந்திர கோளாறுகளை சந்தித்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.இதனால், சந்திரயான் -3 சந்திரன் தரையிறங்குவதற்கு கடைசி 15 நிமிடங்களுக்கு முன், இந்த தவறை தவிர்க்க இந்த முறை சந்திரயான்-3ல் பல வகையான சென்சார்கள் மற்றும் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

லேண்டர் தரையிறங்கும் நேரலை:

ஆகஸ்ட் 23, 2023 இன்று  மாலை 18:04 மணி (6.04 மணிக்கு) அளவில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இன்று  மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்