10 கட்டங்களாக பயணிக்கும் சந்திரயான் 3…. எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா!

Chandrayaan3

நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணிக்கிறது என இஸ்ரோ தகவல்.

இந்திய உட்பட உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் 2ல் நிகழ்ந்த தவறுகளை சரி செய்து, இதனடிப்படையில் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது. இதனால், நிலவில் தடம் பதிக்குமா இந்தியா என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதனால் இன்றைய நாள் இந்தியாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நீண்ட ஆண்டு முயற்சிக்கு இன்று பலன் கிடைக்க உள்ளது. இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3’ விண்கலம் இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சசதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட் சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு துவங்கியது. நிலவின் தரை தளத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் – 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவு 615 கோடி ரூபாயாகும்.

சந்திரயான் – 3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் ‘லேண்டர், ரோவர்’ சாதனங்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.

எனவே, இன்று பிற்பகல் பூமியில் இருந்து புறப்படும் எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட், 173 கி.மீ துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தை நிலை நிறுத்தும். அங்கிருந்து சுற்றுவட்ட பாதையில், 36,500 கி.மீ, துாரம் வரை விண்கலம் அனுப்பப்படும். ஈர்ப்பு விசையை மையமாக வைத்து, முதலில் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்பப்படும். இதன்பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தும் வெற்றியடையும் பட்சத்தில், ஆக. 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காகத்தான் இந்தியாமட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனென்றால், சந்திரயான் – 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் சாதனம் நிலவில் தரை இறங்கும் போது தான் தோல்வியை சந்தித்தது. இதனால் இம்முறை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முறை வெற்றி அடையும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரயான் – 3 குறித்து மேலும் சில விஷயங்களை பார்க்கலாம். அதாவது, நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணிக்கிறது. 10 கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால், சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்க முடியும். பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சந்திரயான் – 3 செல்வது தான் முதல் கட்டம். சந்திரயான் – 3 விண்கலத்தை புவியின் நீள்வட்டப்பாதையில் சுற்ற வைப்பது தான் 2ஆவது கட்டம்.

இதுபோன்று, சந்திரயான் – 3 வெற்றி அடைய 10 கட்டங்களாக பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது. சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைய 40 நாட்கள் எடுத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2008 அக்., 22ல் நிலவுக்குச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது. இதேபோல் சந்திரயான் – 3 விண்கலமும், நிலவு தொடர்பான பல புதிய தகவல்களை கண்டறிய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்