சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்பா? இஸ்ரோ விஞ்ஞானி தகவல்!
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து, நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. இதன்பின் பல்வேறு கட்டங்களாக சுற்றுப்பாதை தூரம் குறைப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், அதன் தூரமும் இறுதியாக குறைக்கப்பட்டு, நாளை நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சாதகமான சூழல் இல்லை என்றால் லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரோவின் அகமதாபாத் மையத்தின் இயக்குநர் கூறுகையில், சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் சூழல் சாதகமற்றதாக இருந்தால் ஆகஸ்ட் 27ம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால், லேண்டரின் தன்மை மற்றும் நிலவில் இருக்கும் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தரையிறங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். நாளை சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு சரியாக 2 மணிநேரத்திற்கு முன்பு, அது தரையிறங்குவது அப்போது சரியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இருப்பினும், எந்த பிரச்சினையும் இல்லையென்றால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி (நாளை) தரையிறக்க முடியும் எனவும் கூறினார். பெங்களுருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறக்குவதற்கான நடவடிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.