Chandrayaan-3: நிலவை மிக அருகில் பார்த்திருக்கீங்களா? இஸ்ரோ வெளியிட்ட வீடியோ!
ஆகஸ்ட் 20-ல் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவை படம்பிடித்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ நிறுவனம்.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி (நாளை) நிலவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
முன்னதாக, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அதற்கு இஸ்ரோ இன்று காலை விளக்கமளித்தது. அதன்படி, சந்திரயான்-3 செயல்பாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி, நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்பதை உறுதி செய்தது.
மேலும் தனது X தள பதிவில், ஆகஸ்ட் 19, 2023 அன்று சுமார் 70 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா (LPDC) மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் இஸ்ரோ நிறுவனம் வீடியோவாக வெளியிட்டது. LPDC படங்கள் லேண்டர் தொகுதி அதன் தரையிறங்கும் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) நிர்ணயம் செய்வதன் மூலம் அவற்றை உள் நிலவு குறிப்பு வரைபடத்துடன் பொருத்துகிறது.
தற்போது, ஆகஸ்ட் 20ம் தேதி சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் படம்பிடித்த நிலவின் நெருக்கமான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது. முன்பு வெளியிட்ட புகைப்படங்களை விட இந்த புகைப்படங்களில் நிலவு மிகவும் அருகில் இருப்பது போல் தெரிகிறது.
…. and
The moon as captured by the
Lander Imager Camera 4
on August 20, 2023.#Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/yPejjLdOSS— ISRO (@isro) August 22, 2023
இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.