நிலவை நெருங்குகிறது சந்திரயான்-3! எதிர்காலத்தில் சந்திரயான் -4 திட்டம் – மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான்-3 நிலவை நெருங்குகிறது என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், அறிவியல் அடுத்த கட்டத்தை நோக்கி போகவும், மனிதன் நிலவுக்கு செல்லும் வகையிலும் இந்த முயற்சி அமையும். லேண்டர் தரையிறங்க கூடிய இடம் கரடு முரடாக இல்லாத வகையில் பார்த்து வருகிறோம். எதிர்காலத்தில் நிலவில் இருந்து பொருட்களை பத்திரமாக எடுத்து வர சந்திரயான்-4 செயல்படுத்தப்படும் என்றார்.
அதாவது, சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திரயான் – 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சந்திரயான் – 3 மற்றும் ரஷ்யாவின் லூனா – 25 இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தான் உள்ளது. இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்தாலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இளைஞர்கள் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்ந்தது. அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்புவெற்றிகரமாக அமைந்தது.
இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. உந்துவிசைக் கலனும், லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதை de-boosting முறையில் குறைக்கப்பட்டுள்ளது.
லேண்டர், நிலவுக்கு நெருக்கமாக 113 கிமீ x 157 கிமீ தொலைவில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட சுற்றுப்பாதை உயரம் குறைப்பு நாளை பிற்பகல் 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆக.23ம் தேதி 30 கி.மீ. என்ற நெருக்கமான தொலைவில் இருக்கும் சூழலில் தான் நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போதுதான், அந்த நிமிடங்கள் தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாடே பதற்றத்தில் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.