ChandrababuNaidu: தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க என் உயிரைத் தியாகம் செய்வேன்.! சந்திரபாபு நாயுடு ட்வீட்..
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியினர் திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்ற்னர்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்று காலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்து வருகிறேன். தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கும், எனது ஆந்திராவுக்கும், எனது தாய்நாட்டிற்கும் சேவை செய்வதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.