ChandrababuNaidu: சந்திரபாபு நாயுடு கைது.! சிஐடி அலுவலகத்தில் 5 மணி நேரம் தொடர் விசாரணை.!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரையில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக, 4 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத்தில் உள்ள கேபிஆர் பூங்காவில் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவ பொம்மையையும் அவர்கள் எரித்தனர்.
விசாகப்பட்டினம் பெட்டகடிலி பிஆர்டிஎஸ் சாலையிலும், திருப்பதியிலும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்ற்னர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.