முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு.. 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்து.!
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு இன்று அமராவதியில் உள்ள அம்மாநிலச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் முன்னிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் 18வது முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
நேற்று முதலமைச்சருடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவின் எம்எல்ஏக்களும் அடங்குவர். ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமராவதியின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டார்.
சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாயுடு, பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15,000, ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.20,000 ஆண்டு நிதியுதவி உட்பட ஆறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.