திறன் மேம்பாட்டு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்.!

Chandrababu Naidu

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இவரதுக் கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 18 அன்று நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் அவரை ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நாயுடுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, திறன் மேம்பாட்டு வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அதோடு நவம்பர் 24ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி முக்கிய ஜாமீன் மனு மீதான வாதங்களை நீதிமன்றம் விசாரிக்கும். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்