திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் இன்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று கவுண்டர்களில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது.
திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ” இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை குழு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
அதன் பிறகு, “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை வழங்கப்படும். காயமடைந்த 35 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். ” என்றும் தெரிவித்தார்.
விபத்து குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “இச்சம்பவத்தில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் நன்றாக கையாண்டு இருக்கலாம். அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேர இடைவெளியில் பக்தர்களை அனுமதித்து இருக்கலாம். பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 3 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட DSP உட்பட 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக திருமலையில் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், முந்தைய அரசாங்கம் தான் திருப்பதியில் டோக்கன் வழங்கும் நடைமுறையை கொண்டுவந்தது.” என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.