வேகமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்..15 பேர் உயிரிழப்பு! அறிகுறிகள் என்ன?
குஜராத் : சண்டிபுரா (CHPV) என்கிற வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் 15 பேர் உயிரிழப்பு, 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சண்டிபுரா வைரஸ் குறித்த செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள வைரஸ் தொற்றுகளுக்கான ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, இது ஒரு தொற்று நோய் கிடையாது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது.
குஜராத் மற்றும் மாநில அரசு அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, சண்டிபுரா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், முதலில் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் எந்த குழந்தைக்கும் அதிக காய்ச்சல் அல்லது தலை அல்லது உடலில் வீக்கம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சண்டிபுரா வைரஸ் :
சண்டிபுரா வைரஸ் என்பது ஆர்என்ஏ வைரஸ் ஆகும், இது பொதுவாக பெண் ஃபிளெபோடோமி ஈ மூலம் பரவுகிறது. கொசுக்களில் காணப்படும் ஏடிஸ் தான் அதன் பரவலுக்கு காரணம். 1966-ம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிராவில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த வைரஸ் நாக்பூரில் உள்ள சந்திப்பூரில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு சண்டிபுரா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த வைரஸ் 2004 முதல் 2006 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பரவியது.
குறிப்பாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சண்டிபுரா சிகிச்சைக்கு இதுவரை மருந்து எதுவும் தயாரிக்கப்படவில்லை.
சண்டிபுரா வைரஸின் அறிகுறிகள் என்ன?
சண்டிபுரா வைரஸ் காரணமாக, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் கடுமையான மூளையழற்சியையும் ஏற்படுத்தும். மூளையழற்சி (Encephalitis) என்பது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.