வாக்கெடுப்பில் வெற்றி.! தப்பித்தார் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன்.!
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்த பின்னர், புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் , மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்கண்ட் மாநில நம்பிக்கை வாக்கெடுப்பு.! சட்டசபை வந்தடைந்தார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.!
ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத்துறையின் விசாரணை காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல்துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு வந்தனர்.
இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முதல்வர் சம்பாய் சோரனின் உரையை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு பெரும்பான்மை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 17 மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் சம்பாய் சோரன் 47 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர உள்ளார் சம்பாய் சோரன். அவருக்கு எதிராக 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.