“அனைத்து கார்களிலும் இனி இவை கட்டாயம்” – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!
8 பேர் வரை பயணிக்கும் அனைத்து இந்திய கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பயணிகள் கார்களுக்கு ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கும் ஜிஎஸ்ஆர் வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“8 பேர் வரை செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்,குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு நான் இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன்.இந்தியாவில் மோட்டார் வாகனங்களை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்ற இது ஒரு முக்கியமான படியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
In order to enhance the safety of the occupants in motor vehicles carrying upto 8 passengers, I have now approved a Draft GSR Notification to make a minimum of 6 Airbags compulsory. #RoadSafety #SadakSurakshaJeevanRaksha
— Nitin Gadkari (@nitin_gadkari) January 14, 2022
இதன்மூலம்,மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது,தற்போது வாகனங்களின் பின்பக்கத்தை பாதுகாப்பானதாக மாற்ற முயற்சிக்கிறது. அதாவது,பின்பக்க பயணிகளுக்கு நான்கு ஏர்பேக்குகள் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் அபாயகரமான காயங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.
கடந்த ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,நாட்டில் உள்ள வாகன உற்பத்தியாளர்களிடம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குமாறு வலியுறுத்தியதோடு,ஏர்பேக் மற்றும் தேவையான வாகன மாற்றங்களுக்கான விலையை வழங்குமாறு ஏர்பேக் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.அதனடிப்படையில்,ஏற்கனவே இரண்டு ஏர்பேக்குகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மேலும் நான்கு ஏர்பேக்குகளைச் சேர்ப்பதன் மூலம் அதன் விலை சுமார் ரூ.8,000-10,000 ஆக இருக்கும் என்றும்,ஒவ்வொரு ஏர்பேக்கின் விலை ரூ.1,800 முதல் 2,000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதனால்,வாகனங்களின் விலைகள் மேலும் சற்று உயரும் என எதிர்பார்க்கலாம்.