பாகிஸ்தான் ஆதரவு கருத்து., 16 யூ-டியூப் சேனலுக்கு தடை! மத்திய அரசு உத்தரவு!
பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களையும், தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறி 16 யூ-டியூப் சேனல்களை மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது.

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விசா நிறுத்தம், தூதரக உறவு, வர்த்தக உறவு துண்டிப்பு, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல பாகிஸ்தான் அரசும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் வான்வழியை இந்தியா பயன்படுத்த கூடாது என்றும், சிம்லா ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இப்படி இரு நாடுகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் மத்திய அரசு 16 யூ-டியூப் சேனல்களை முடக்கியுள்ளது.
இந்த 16 யூ-டியூப் சேனல்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாகவும், தீங்கு விளைவிக்கக்கூடிய இனவாதத்தை கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு 16 பிரபல யூ-டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த 16 சேனல்களும் 63 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளது. மத்திய உள்துறையின் பரிந்துரையின் கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும், பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் இந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன. தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராசி நாமா ஆகிய யூ-டியூப் சேனல்களும் தடைசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025