உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, CBI, NIA உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, CBI, NIA உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அவற்றைக் கண்டறிவது கடினமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிறிய வேறுபாடுகளைக் கவனிப்பதன் மூலம் இந்தப் போலி ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி, தற்போது சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அதாவது, தரம் மற்றும் அச்சில், அச்சு அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் மாறாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும் என்றும், அது என்னவென்றால் அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது.
இந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி ரூபாய் நோட்டுகள் மிகவும் ஆபத்தானவை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.